×

விவசாயிகளுக்கு ஆதரவாக மண்டி ஹவுஸ் பகுதியில் திரண்ட தன்னார்வலர்கள்: ஜந்தர் மந்தர் வரை பேரணி நடத்த திட்டமிட்டதால் பதற்றம்

புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண்  சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தும்  விவசாயிகளுக்கு ஆதரவாக,  மண்டி ஹவுஸ் பகுதியில்  மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள்  திரண்டு பேரணி செல்ல முயன்று வருகின்றனர். புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட் மற்றும் உபி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் கூடி கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

போலீஸ் மற்றும் மத்திய அரசின் பல்வேறு தடுப்பு முயற்சிகளுக்கு இடையேயும் ஏராளமான விவசாயிகள் டெல்லி எல்லையை நோக்கி ஆதரவு கரம் நீட்ட சென்று வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரியும் நேற்று மண்டி ஹவுஸ் பகுதியில் ஏராளமான மாணவர்கள் அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் திரண்டனர். அவர்கள் மண்டி ஹவுசிலிருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணி செல்ல இருப்பதாகவும் கூறினர்.

குறிப்பாக, சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் பலகைகளை ஏந்தி ஏஐஎஸ்ஏ,எஸ்எப்ஐ,ஏஐஎஸ்எப், டிஎஸ்எப், என்எஸ்யுஐ, சிஓய்எஸ்எஸ்,ஏஐபிடபிள்யுஏ மற்றும் ஏஐசிசிடியு அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் ஜந்தர் மந்தர் வரை ”விவசாயிகளுக்காக குடிமக்கள் அணிவகுப்பு” நடத்த கூடியிருந்தனர்.
ஆனால், ஜந்தர் மந்தர் பகுதிக்குள் நுழைய அனுமதியில்லை என்றும், அந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். எனினும் தொடர்ந்து மண்டி ஹவுஸ் நோக்கி தன்னார்வலர்கள் பலர் திரண்டு வருவதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

Tags : Volunteers ,area ,Mandi House ,rally ,Jantar Mantar , Farmers, volunteers, rally
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு...